
தேவனுடைய திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை. உதாரணமாக, இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறக்க வேண்டுமென்பதை முன்னறிவித்த ‘’எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே… இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்’’ என்ற மீகா 5-ஆம் அதிகாரத்தின் 2-ஆம் வசனம்(கி.மு. 719) நிறைவேற, நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிற்கு வரவேண்டியதாக இருந்தது. அப்படி அவர்கள் புறப்பட்டு வருவதற்கு, ரோம் நகரத்திலிருந்து அகஸ்து ராயன் எனப்படும் அகஸ்டஸ் சீசரால் ‘உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும்!’ என்ற கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டியதாக இருந்தது. அந்தக் கட்டளையால் ரோம சாம்ராஜ்யம் முழுவதுமே அல்லல் பட வேண்டியதாயிருந்தது.
அது போலவேதீர்க்கதரிசனங்களில் முன்னறிவிக்கப்பட்ட சின்னஞ்சிறிய இஸ்ரேல் நாடு பிறக்க, உலகமே இரண்டு மகா யுத்தங்களால் பிரசவ வேதனைப்பட வேண்டியதாயிருந்தது. அந்தப் பிரசவத்தில், ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாய் இல்லாமல் இருந்த ஓர் தேசம்,இஸ்ரேல் என்ற பெயரில் மீண்டும் பிறப்பெடுத்தது.
தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல், உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வந்த யூத மக்கள், பலஸ்தீனா எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் போய்க் குடியேற ஒரு பிரகடனம் தான் வழிவகுத்தது. அந்தப் பிரகடனம் உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் ’முதலாம் உலக மகா யுத்தமே’ (FIRST WORLD WAR)முழு காரணம். மோசே மற்றும் யோஷூவா தலைமையில் உருவெடுத்த பூர்வ இஸ்ரேலின் உருவாக்கத்தில், உலகம் காணாத பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திய நம் தேவனாகிய கர்த்தர், இன்றைய நவீன இஸ்ரேலின் உருவாக்கத்திலும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தினார்.
முதலாம் உலக யுத்தம் துவக்கம்!
1914-ம் வருடம். பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் தொடங்கிய யுத்தம் ஒன்று, பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் உலக மகா யுத்தமாக மாறத் துவங்கியது. பிரிட்டனுடன் பிரான்ஸ் மற்றும் சோவியத் ரஷ்யா கூட்டணி அமைக்க, ஜெர்மன் தரப்பிலோ அன்றைய ஆஸ்திரிய –ஹங்கேரி பேரரசும், ஒட்டோமான் துருக்கி பேரரசும் யுத்தக்களம் கண்டன.
கோர்டைட்டும் அசிட்டோனும்!
இந்த யுத்தத்தில் பிரிட்டன்தரப்பில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளின் குண்டுகள் ’கோர்டைட்’ எனும் வெடிமருந்தினால் தயாரிக்கப்பட்டன. இந்த வெடிமருந்து கொண்டு தயாரிக்கப்படும் குண்டுகள் ‘புகையில்லா குண்டு’களாக வெளிப்பட்டன. ’கோர்டைட்’மருந்தை 1889-ம் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே தயாரித்துவந்தது பிரிட்டன். ஏனெனில், பிரிட்டிஷ் இராணுவமும் அதன் கடற்படையும் தங்கள் பீரங்கிகளுக்கான குண்டுகளுக்கு ’கோர்டைட்’டையே சார்ந்திருந்தன. மேலும் தரைப்படை மற்றும் கடற்படை விமானங்களை தீயிலிருந்து காப்பது, அவற்றின் இறக்கைகளில் நீர்ப்புகாமற் பாதுகாப்பது, மற்றும் அவற்றை உறுதிப்படுத்துவது ஆகிய பாதுகாப்பு அம்சங்களில் மேற்பூச்சாகவும் இந்த ’கோர்டைட்’ பயன்படுத்தப்பட்டு வந்தது.
’கோர்டைட்’ தயாரிப்பில் பொதுவாக அசிட்டோன் எனும் வேதிப்பொருளே மிக முக்கிய அங்கமாக இருந்தது. அன்றைய வேதியியல் உலகில், அசிட்டிக் அமிலத்தன்மை கொண்ட மரங்களை சில வேதியியல் செயல்முறைகளுக்கு உட்படுத்துவதன் மூலமாகவே அசிட்டோனை தயாரித்து வந்தனர். இந்த முறையில் 1 டன் அசிட்டோன் தயாரிக்க மட்டுமே 100 டன் மரங்கள் தேவைப்படும். அந்த மரங்களும் பரவலாக எல்லா நாடுகளிலும் இருக்காது. ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற குறிப்பிட்ட நாடுகளிலேயே வளரும்.
அசிட்டோன் உற்பத்திக்கு, இந்த செயல்முறையையும் வழிமுறையையுமே பிரிட்டனும் பின்பற்றி வந்தது. அசிட்டிக் அமில வகை மரங்களை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றிலிருந்து அசிட்டிக் அமிலத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அந்நாடு அசிட்டோனை உற்பத்தி செய்துவந்தது. அதன் மூலம் தன் பீரங்கிகளுக்கான கோர்டைட் தேவையையும் அந்நாடு பூர்த்தி செய்துகொண்டது.
தோல்வி பயத்தில் தத்தளித்த பிரிட்டன்!
இந்த நிலையில், யுத்தக்காலத்தில் பிரிட்டன் இராணுவ பீரங்கிகளுக்கான குண்டுகளின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க, அந்த குண்டுகளை தயாரிப்பதற்கான’கோர்டைட்’டின் தேவையும் அதிகரித்தது. கோர்டைட்டை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், டன் கணக்கில் அசிட்டோன் தேவை.
பொதுவாகவே, ஒரு டன் அசிட்டோன் உற்பத்தி செய்வதற்கே, 100 டன் அளவில் ’அசிட்டிக் அமில’ மரங்கள் தேவை என்பதால், யுத்தக்கால அசிட்டோன்தேவையும் பல்லாயிரம் டன்களாய் அதிகரித்து, அவற்றிற்கான மரங்களின் தேவையும் பல லட்சம் டன்களாய் அதிகரித்தது. அந்த மரங்களையும் ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், ஆஸ்திரிய ஜெர்மனி நாடுகளோ அப்போது பிரிட்டனுக்கு எதிர் வரிசையில் யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால், அசிட்டோன் உற்பத்திக்கான மரங்களை இறக்குமதி செய்யும் வாய்ப்புகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. செய்வதறியாமல் தவித்தது பிரிட்டன்.
குண்டுகள் இல்லாமல் பீரங்கிகள் இயங்க முடியாது. கோர்டைட் இல்லாமல் குண்டுகள் உருவாக முடியாது. அசிட்டோன் இல்லாமல் கோர்டைட்உருவாக்க முடியாது. ஆஸ்திரிய, ஜெர்மனி மரங்கள் இல்லாமல் அசிட்டோன் தயாரிக்க முடியாது.
பிரிட்டனின் இராணுவ நிலை இப்படி இருக்க, யுத்தத்தின் நிலையோ இன்னும் இன்னும் நீண்டுகொண்டே இருந்தது. 1914-ன் இறுதியில் துவங்கிய யுத்தம், 1916-ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. யுத்தம் நீண்டதால், பீரங்கி குண்டுகளின் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போய், பிரிட்டனின் தோல்வி பயம் கூடிக்கொண்டே போனது; உயர் அதிகார மட்டங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
அவமானகரமான தோல்வியை சந்தித்த பிரிட்டன்
இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1915 பிப்ரவரி முதல் 1916 ஜனவரி வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில், ஒட்டமான் துருக்கி பேரரசின் முக்கிய நிலைகள் மீது ’கல்லிபோலி’ என்ற இடத்தில் மையம் கொண்டு, தொடர் தாக்குதல்களை நிகழ்த்தியபிரிட்டன், .அதில் பெரும் தோல்வியை சந்தித்தது. பீரங்கி குண்டுகள் பற்றாக்குறை (lack of artillery shells) ஏற்படுத்திய பதற்றத்தோடு, ’கல்லிபோலியில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியும் (humiliating defeat) சேர்ந்துகொள்ள, தொடர்ந்து யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என கலங்கி நின்றது, அன்றைய உலக வல்லரசு.
வெளியேற்றப்பட்ட பிரதமர் ஹெர்பர்ட் ஹென்றி!
பிரிட்டனின் அரச குடும்பம் உள்ளிட்ட உயர் அதிகார மட்டத்திலிருந்து, பிரதமர் ஹெர்பர்ட் ஹென்றி அஸ்க்வித் மீது அதிருப்திகள் வெடித்தன. அவர் பிரதமர் பதவியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, டேவிட் லாயிட் ஜார்ஜ் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார். இவர், ஹெர்பர்டின் அமைச்சரவையில் யுத்த அமைச்சராகப் பணியாற்றியவர். பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றம்பலன்கொடுக்கத் தொடங்கியது. பிரிட்டனின் தோல்வி முகம் மெல்ல மாற துவங்கியது.
இரட்சகனாய் வெளிப்பட்ட இங்கிலாந்தின் யூதன்!
உண்மையில், பிரதமர்டேவிட் லாயிட் ஜார்ஜூக்குபின்னணியில் இருந்து பிரிட்டனின் தோல்வி முகத்தை மாற்றி அமைத்தவர், செய்ம் வெய்ஸ்மான் என்ற யூதர் தான். இவருக்கும் பிரிட்டனின் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த உறவுதான், உலக யுத்தத்தில் பிரிட்டனின் எழுச்சிக்கும், உலக அரங்கில் இஸ்ரேலின் பிறப்புக்கும் வித்திட்டது.
யார் இந்த செய்ம் வெய்ஸ்மான்?
யூதர்களின் பூர்வ நிலமான பலஸ்தீனாவில் அவர்களுக்கென அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு அமைய வேண்டும் என்பதற்காக, 1897-இல் தியோடர் ஹெர்சல் என்பவர் சீயோனிஸ்ட் அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்துவந்த யூத அறிஞர்களும், கல்வியாளர்களும், செல்வந்தர்களும் அங்கம் வகித்து வந்தனர். அவர்களில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த செய்ம் வெய்ஸ்மானும் ஒருவர். பின்னர் இவர் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தபோது, அந்நாட்டின் சீயோனிஸ்ட் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் தலைவராகவும் உயர்ந்தார். அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டபோது, அவருக்கு அதிகாரமட்டத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு தொடர்புகள் ஏற்பட்டன.
வேதியியல் விஞ்ஞானியாக!
1904-ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறிய வெய்ஸ்மான், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பல்கலைக்கழகப் பணியாளராக மட்டுமல்லாமல், தன் துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவற்றில் தான் கண்டறிந்த வெற்றிகரமான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களையும் அவர் பெற்று வந்தார். வேதியியல் துறையில் பெயர் சொல்லத்தக்க வகையில் அவர் நிகழ்த்திய பல்வேறு பங்களிப்புகளுள் ஒன்று, ’அசிட்டோன்’ என்ற கரைப்பான் (SOLVENT) தயாரிப்பு.
அறிவியல் உலகை ஆச்சரியப்படுத்திய வெய்ஸ்மான் செயல்முறை!
அசிட்டோன் தயாரிப்பில் அன்றைய அறிவியல் உலகில் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த கடினமான செயல்முறைக்கு, செய்ம் வெய்ஸ்மான் ஒரு எளிய மாற்று முறையை கண்டுபிடித்தார். அரிய வகை மரங்களுக்கு பதிலாக, எளிதாகக் கிடைக்கும்மக்காச்சோள வகைகளையும் உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தி அவர் அசிட்டோன் தயாரித்துக் காண்பித்தார். அதிலும் முக்கியமாக அவர் சோள வகைகளையே அதிகம் பயன்படுத்தினார். அசிட்டோன் உற்பத்தியில் செய்ம் வெய்ஸ்மான் புகுத்திய இந்த புதிய முறை “வெய்ஸ்மான் செயல்முறை” என்று அழைக்கப்படுகிறது. வெய்ஸ்மானின் இந்த கண்டுபிடிப்பு, அறிவியல் மரபுகளுக்கே அப்பாற்பட்டதாக இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது.
’மரவகை’ அசிட்டோனுக்கு, செய்ம் வீஸ்மானின் ’மக்காச்சோள’ அசிட்டோன் மிகச்சிறந்த மாற்றுமுறையாக இருந்தது. ஆம். அசிட்டோனுக்கான மரங்களை இனி எந்த நாட்டிலிருந்து பெறுவது என இங்கிலாந்து தவிக்க, அந்த இங்கிலாந்தில் விளைந்த சோளத்தை வைத்தே அசிட்டோன் தயாரிப்பதில் வெற்றி கண்டிருந்தார் வெய்ஸ்மான்.
வெய்ஸ்மானுடன் கைக்கோர்த்த வின்ஸ்டன் சர்ச்சில்!
1916. ஆட்சியாளர்களின் கவனம் செய்ம் வெய்ஸ்மான் பக்கம் திரும்பியது.பிரிட்டனின் அதிகார வரிசையில் முதன்மையான இடத்திலிருந்த பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வெய்ஸ்மானிடம், ’’அசிட்டோன் மருந்தை பெரிய அளவில் தயாரித்துத் தர முடியுமா’’ என்று கேட்க, அதற்கு ’’தேவையான சோளவகைகளையும் தொழிற்சாலையையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்துத் தருகிறேன்’’ எனக் கூறினார் வெய்ஸ்மன்.
ஆய்வகத்திற்குள் மட்டுமே அதுவரை பயணித்த வெய்ஸ்மான் செயல்முறை, விரைவான போர்க்கால விரிவாக்கத்திற்குட்பட்டு, தொழில்சாலைகளை நோக்கி நகர்ந்தது. பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகைக்குள் இருந்த எல்லா நாடுகளிலுமிருந்தும் சோள வகைகள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகள் இரவும் பகலும் தீவிரித்து இயங்கத் தொடங்கின. தேவையான அசிட்டோனை வெய்ஸ்மான் உற்பத்தி செய்து கொடுத்துக்கொண்டே இருந்தார்.
தடையில்லா அசிட்டோன் உற்பத்தியால், கோர்டைட் வெடிமருந்து உற்பத்தியும் அதிகரித்தது. கோர்டைட்டின் உற்பத்திப் பெருக்கத்தால் புகையில்லா குண்டுகளும் தயாராகிக்கொண்டே இருந்தன. குண்டுகளின் பெருக்கத்தால் பிரிட்டன் பீரங்கிகளும்தடையில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தன.வெற்றியும் பிரிட்டன் வசமாகிக்கொண்டே இருந்தது.
புதிய வரலாற்றிற்கு வித்திட்ட ’ஆபரேஷன் பலஸ்தீனா’!
’கல்லிபோலி’யில் ஒட்டோமான் துருக்கி இராணுவத்திடம் அடைந்த பெரும் தோல்விக்கு பிறகு, புதிய உத்வேகத்துடன் மீண்டும் யுத்தக்களம் கண்டன பிரிட்டன் படைகள். ’பலஸ்தீனாவில் ஒரு யூத நாடு’ என்பதை இலக்காகக் கொண்ட ’சீயோனிஸ்ட்’ செய்ம் வெய்ஸ்மானின் உதவியுடன் புறப்பட்ட முப்படைகளின் திட்டமே,இந்த முறை அந்தப் பலஸ்தீனாவைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.
நெருக்கடி காலத்தில் உதவும் வெய்ஸ்மானுக்காக இப்படியொரு திட்டமா என்றால், நிச்சயமாக இல்லை. தங்களை தோற்கடித்த ஒட்டமான் துருக்கியிடமிருந்து அதன் முக்கிய நிலப்பரப்புகளுள் ஒன்றான பலஸ்தீனாவை கைப்பற்றுவதன் மூலம், அதனை வீழ்த்த முடியுமென்பதே பிரிட்டனின் வியூகமாக இருந்தது. பலஸ்தீனாவையும் எருசலேமையும் மீட்பதே அதன் ஒரே நோக்கமாக இருந்தது. இந்த வியூகத்திற்கு ‘ஆபரேஷன் பலஸ்தீனா’ என பெயரிடப்பட்டது. பிரிட்டனின் பார்வையில் இது ஒரு போர் வீயூகம் மட்டுமே. ஆனால், நம் தேவனாகிய கர்த்தருடைய பார்வையிலோ, அது மீண்டும் அமையப்போகிற இஸ்ரேலுக்கான வீயூகமாகவே இருந்தது.
மமலூக்கியரிடமிருந்து 1516-இல் பலஸ்தீனாவை கைப்பற்றிய ஓட்டோமானியர், 1917 வரை 401 ஆண்டுகள் அப்பிரதேசத்தை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர். அந்நாடுஜெருசலேம், காசா மற்றும் நப்லஸ் என 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிரியாவின் தலைநகரமான தமஸ்கு எனப்படும் டமஸ்கஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித பூமியான பலஸ்தீனாவையும் புனித நகரமான எருசலேமையும், இஸ்லாமிய ஒட்டோமானிய பேரரசிடமிருந்து கைப்பற்றும் நோக்கத்தோடு புறப்பட்ட பிரிட்டன் இராணுவத்திற்கு துவக்கத்திலேயே வெற்றிகள் கிடைத்துவிடவில்லை. 1917. மார்ச்சில் நிகழ்ந்த ’முதல் காசா போரிலும்’, ஏப்ரலில் நிகழ்ந்த இரண்டாம் காசா போரிலும் ஓட்டோமானியரே வெற்றிபெற்றனர். இதனால், இஸ்ரேலை நோக்கிய பிரிட்டிஷாரின் முன்னேற்றம் தற்காலிகமாக தடுக்கப்பட்டது.
போரின் முடிவுகளை மாற்றி எழுதிய ஆலன்பி!
இந்நிலையில், ’ஆபரேஷன் பாலஸ்தீனா’வை தலைமையேற்று நடத்த, பிரிட்டிஷ் இராணுவத்தின் மிக முக்கியமான தளபதியான ஜெனரல் எட்மண்ட் ஆலன்பி அனுப்பி வைக்கப்பட்டார். எகிப்திய பயணப் படையின் தலைவரான அவர், 1917 ஜூன் மாதம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு வந்தபின்,இடைவிடாமல் செயல்பட்டு எருசலேம் நகரத்தை பிடிப்பதற்கான வழிகளை திறக்க முயன்றார். இறுதியில் ஒட்டோமான் படைகள் ஏற்படுத்தி வைத்திருந்த பாதுகாப்புகளை உடைப்பதில் வெற்றி கண்டார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜிடமிருந்து, ‘எருசலேமை அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்ற உத்தரவு பறந்து வந்தது. இது, பிரிட்டிஷ் முப்படை வீரர்கள் மத்தியில் மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. தெற்கு இஸ்ரேலின் மிக முக்கியப் பகுதியான பெயர்செபாவும் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
எருசலேம் கைப்பற்றப்படுதல்
பிரிட்டிஷ் இராணுவத்தின் தரைப்படை, கடற்படை பீரங்கிகள் மற்றும் விமானங்கள் இடைவிடாமல் ஓட்டோமான் துருக்கிய துருப்புக்கள் மீது குண்டு வீசின. ஏற்கெனவே, பசியோடும் நோயோடும் போராடிக் கொண்டிருந்த துருக்கியர், பிரிட்டிஷ் இராணுவத்தின் முப்படை தாக்குதல்களால் நிலைகுலையத் தொடங்கினர். டிசம்பர் 8 இரவில் துருக்கி படைகள் எருசலேம் நகரத்தைக் கைவிட்டு வெளியேறினர். எருசலேமை கைப்பற்றுவதற்கான யுத்தம் மட்டுமே அக்டோபர் 31 தொடங்கி, டிசம்பர் 8 வரை நிகழ்ந்திருந்தது.
எருசலேமிற்குள் காலடி எடுத்துவைத்த ஆலன்பி!
டிசம்பர் 11. ஜெனரல் எட்மண்ட் ஆலன் பி,எருசலேமின் ’ஜஃபா’ வாசலுக்குக் கால்நடையாகவே கடந்து சென்றார். அந்த வாசல் வழியாக அவர் எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தார்.யூதர் மற்றும் கிறிஸ்தவர்களின் தலைநகரமும் புனித நகரமுமான எருசலேம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவ நாட்டின் கையில் வந்தது. ஐரோப்பிய பத்திரிக்கைகள், எருசலேமிற்கான இந்த யுத்தத்தை சிலுவைப்போரோடும், ஆலன்பியை ’முதல் சிலுவைப்போரில்’ எருசலேமைக் கைப்பற்றிய ’காட்ஃப்ரே பவுல்லனினோடும்’ ஒப்பிட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலுவைப்போரைத் தொடங்கி, அதில் தோல்வியுற்ற ஆங்கிலேய மன்னன் ’ரிச்சர்ட் தி லயன்ஹார்’ என்பவரின் ’முடிக்கப்படாத சிலுவைப்போரை’ ஆலன்பி முடித்து வைத்ததாகவும் கூறின.
முடிவுக்கு வந்த ஒட்டோமான் ராஜ்ஜியம்!
பலஸ்தீனாவை பிரிட்டனிடம் இழந்ததன் மூலம், முதலாம் உலக யுத்தத்தில் ஓட்டொமான் பேரரசின் தோல்விக்கணக்கு தொடங்கியது. பலஸ்தீனாவை மீட்கும் பிரிட்டனின் அதிதீவிர யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான ஓட்டோமானிய வீரர்கள் பலியாகினர். அவற்றில், எருசலேமுக்கான யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 25 ஆயிரம். 1918-ல் போரின் முடிவில் ஓட்டோமானியர் முழுவதுமாக வீழ்த்தப்பட்டனர்.
முதலில் எந்த ஓட்டோமான் பேரரசிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்ததோ, முடிவில் அதே ஒட்டோமான் பேரரசின் அழிவுக்கே வித்திட்டது பிரிட்டன்.உலக வரலாற்றில், 600 வருடங்களுக்கும் மேலாக நிலைத்திருந்த ஓர் சாம்ராஜ்யம், 1918-இல் முதலாம் உலக யுத்தத்தின் முடிவோடு தானும் முடிவுக்கு வந்து,1922-ல் கலைக்கப்பட்டது. துருக்கியில் ஓட்டோமான் முடியாட்சி ஒழிந்து, இன்றைய நவீன துருக்கி குடியரசுமலர்ந்தது.
அறிவியல் உலகை தாண்டி அரசியல் உலகிலும் ஏற்பட்ட தாக்கம்!
வரலாறுகாட்டியுள்ளபடி, செய்ம் வெய்ஸ்மானின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதனை அறிவியல் உலகம் இன்னும் ஆச்சரியமாகவே பார்க்கிறது.
அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்டு, அன்றைய அரசியல் உலகத்திலும் அதன் தாக்கம் இருந்தது. அந்தத் தாக்கத்தினால் தான் மாபெரும் தோல்வியிலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீட்கப்பட்டது பிரிட்டன். இடையில் கேள்விக்குறியாகி இருந்த வெற்றி, செய்ம் வெய்ஸ்மானுடன் வின்ஸ்டன் சர்ச்சிலும் லாயிட் ஜார்ஜூம் வைத்த கூட்டணியால் அதன் வசமானது. அதனால் பிரிட்டிஷ் பேரரசின் ‘உலக வல்லரசு’ என்ற பெருமைமிகு அடையாளம் காப்பாற்றப்பட்டது. மேலும், நெருக்கடி காலத்தில் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட டேவிட் லாயிட் ஜார்ஜ், அரசு தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்ததால், யுத்தத்திற்குப் பிறகான அமைச்சரவையிலும் 1922 வரை பிரதமராக பதவி நீட்டிப்பு பெற்றார்.
பால்ஃபோர் பிரகடனத்திற்கு வித்திட்ட கலந்துரையாடல்
இப்படிப்பட்ட ஆச்சரிய நிகழ்வுகளால், செய்ம்வெய்ஸ்மான் அதிகார மட்டத்தின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மனிதராக உயர்ந்து நின்றார். அவருக்கு பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜூம், வெளிநாட்டுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோரும்நல்ல வெகுமதி கொடுக்க வேண்டும் என்று விரும்பினர்.
யுத்த முயற்சிக்கு வெய்ஸ்மான் அளித்த பங்களிப்புக்கு ஈடாக,அவர் என்ன பெற விரும்புகிறார் என்று பால்ஃபோர் கேட்டபோது, டாக்டர் வெய்ஸ்மான், “நான் விரும்புவது ஒன்றுதான்: என் மக்களுக்கு ஒரு தேசிய வீடு”என தைரியமாக பதிலளித்தார். ஒட்டோமானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டு, பிரிட்டிஷாரின் ஆளுகைக்குள் வந்திருக்கும் பலஸ்தீனத்தில் யூத மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதே,பிரிட்டனிடம் அவர் எதிர்பார்த்த ஒரே பிரதிபலன்.
தீர்க்கதரிசன நிறைவேறுதல்களுக்கு வித்திட்ட பால்ஃபோர் பிரகடனம்
வெய்ஸ்மானின் கோரிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டுச் செயலாளர் ஜேம்ஸ் பால்ஃபோர் 9.12.1917-இல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். உலக வரலாற்றின் புகழ்பெற்ற பிரகடனங்களுள் ஒன்றான அப்பிரகடனத்திற்கு ’பால்ஃபோர் பிரகடனம்’ என்று பெயர். ’யூதர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், அவர்கள் அங்கிருந்து பலஸ்தீனாவிற்கு வந்து தங்கி, தங்களுக்கு அங்கே சொந்த வீடு கட்டிக் குடியிருப்பதற்கு பிரிட்டனுக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை என்பதே அப்பிரகடனத்தின் சாராம்சம்.
பிரகடனத்திற்கு எதிராக எழுந்த யூதர்களும் அவர்கள் வாதங்களும்!
பலஸ்தீனாவில் யூதர்களுக்கான குடியேற்றத்தை உறுதிசெய்துவெளியான ’பால்ஃபோர் பிரகடனத்திற்கு’அமைச்சரவையில் அங்கம் வகித்த யூதர்கள் சிலரிடமிருந்தே எதிர்ப்புகள் எழுந்தன. ’யூதர்களுக்கான தனி நாடு’கொள்கையுடன் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சீயோனிஸ்ட் அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அவர்கள், அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் செயலாளரும், பிரிட்டிஷ் அமைச்சரவையில் பணியாற்றிய யூதர்களுள் ஒருவருமான எட்வின் மொன்டாகு தலைமையில்’பால்ஃபோர் பிரகடன’த்திற்கு எதிர்த்து நின்று, முட்டுக்கட்டை போட்டார்கள்.
’பிரிட்டிஷ் ஆதரவிலான இந்த சியோனிச நடவடிக்கை, பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களில் குடியேறிய யூதர்களின் நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்றும், ’பிரிட்டனுடன் போரிடும் ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் குறிப்பாக ஒட்டோமான் துருக்கியில் வசிக்கும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழலாம் என்றும் தாங்கள் அஞ்சுவதாகஅவர்கள் தெரிவித்தனர். ஏனெனில், அன்றைய நிலையில், முதலாம் உலக யுத்தம் முழுவதுமாக முற்றுப்பெற்றிருக்கவில்லை. பால்ஃபோர் பிரகடனம், பிரிட்டனை எதிர்த்துப் போரிடும் நாடுகளில் வாழும் யூதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது அவர்களின் வாதமாக இருந்தது.
எனினும், இவர்களின் எதிர்ப்பை லாயிட் ஜார்ஜின் அரசு முறியடித்ததுடன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இத்தாலி (வத்திக்கான் உட்பட) ஆகியவற்றின் ஒப்புதலுடன், வெற்றிகரமான முறையில் பால்ஃபோர் திட்டத்தை முன்னெடுத்தும் சென்றது.
யூத குடியேற்றங்களுக்கு வித்திட்ட ’பால்ஃபோர் பிரகடனம்’
1917-ஆம் ஆண்டின் இறுதியில் பலஸ்தீனாவும் ஜெருசலேம் நகரமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அடுத்த சில நாட்களிலேயே பால்ஃபோர் பிரகடனமும் வெளியிடப்பட்டது. பிரகடனத்திற்கு பிந்தையை ஆண்டுகளில், பலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது. 1918-க்கும் 1948-க்கும் இடையில் பலஸ்தீனாவுக்குள் வந்து சேர்ந்த யூதரின் எண்ணிக்கை 5,65,000-ஆக இருந்தது.
60 ஆண்டுகளுக்குள் மாற்றி எழுதப்பட்ட ’வாடகை வரலாறு’!
சீயோனிய சங்கத்தைச் சேர்ந்தவரும் ஜெர்மனியைச் சேர்ந்த பொதுவுடைமைவாதியும் ஆன மோசஸ் ஹெஸ் என்ற யூதர், 1862-இல் ‘ரோமாபுரியும் எருசலேமும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு, அப்பொழுது பலஸ்தீனாவை ஆண்ட துருக்கி சுல்தானிடம், தங்களுடைய முற்பிதாக்களின் தேசத்திலே போய்க் குடியேற வருட வாடகைக்கு அந்நாட்டில் கொஞ்சம் நிலம் தரக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளுக்கு துருக்கி சுல்தான் செவிகொடுக்கவில்லை.
ஆனால், வாடகைக்குக் கொஞ்சம் இடம் கேட்ட ஒரு யூதருக்கு நிலம் தர மறுத்த அதே ஒட்டமான் துருக்கி பேரரசை, அடுத்த 60 வருடங்களுக்குள் உலக வரைபடத்தில் இருந்தே எடுத்துப் போட்டார் நம் தேவன். வாடகைக்கு இடம் கேட்டும் கிடைக்காத ஒரு தேசத்தில், அதே 60 வருடங்களுக்குள் தன் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை ஒரு பிரகடனத்தின் மூலமாகவே அதிகாரபூர்வமாகக் குடியேற வைத்தார் அவர்.
தேவ திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை!
இத்தனை லட்சம் யூதர்கள் பலஸ்தீனாவுக்குள் வந்து சேர்வதற்கு முதலாம் உலக யுத்தமே அடிப்படைக் காரணமாக இருந்தது. இப்படியொரு யுத்தம் நிகழாமல் இருந்திருந்தால், ஓட்டோமான் துருக்கி பேரரசிடமிருந்து இன்றைய இஸ்ரேல் பகுதிகளும் எருசலேம் நகரமும் மீட்கப்பட்டிருக்காது. செய்ம் வெய்ஸ்மான் என்ற யாரோ ஒரு யூதரின் உதவியும் பிரிட்டனுக்குத் தேவைப்பட்டிருக்காது. ’பால்ஃபோர் பிரகடனம்’ என்ற பிரகடனமும் பிறந்திருக்காது. யூதர்களும் இன்றைய இஸ்ரேல் மண்ணில் குடியேறியிருக்க முடியாது.
அதனால்தான் தேவனுடைய திட்டங்கள் எப்போதும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன.