
இதுவரை இஸ்ரவேல் ஜனங்கள் அல்லது யூதர் திரும்பவும் இரண்டாம் தடவையாக ஆண்டவர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணிய பூமியில் கொண்டுவந்து சேர்க்கப்படுவார்கள் என்று ஐந்து தீர்க்கதரிசிகளின் மூலமாய் முன்னறிவிக்கப்பட்டவைகளைப் பார்த்தோம்.
இத்தீர்க்கதரிசனங்கள் நிறைவேற ஆண்டவர் கையாண்ட முறைகளைப் பற்றி ஆராய்வோம்.
உலக முழுவதிலும் பற்பல ஜாதிகளின் மத்தியில் யூதர் சிதறிக்கிடந்தாலும், 1800 வருடங்கள் கடந்து போயிருந்தாலும், அந்த ஜாதிகளோடு கலவாமல் தனி ஜாதியாக விளங்கினர். இவர்களை அவர்களுக்கு வாக்குப்பண்ணிக் கொடுத்த தேசத்தில் தமது திட்டப்படி கூட்டிச்சேர்க்கக் கர்த்தர் முதலாவது யூதரை அந்த நாட்டிற்கு வர தயார் செய்ய வேண்டியிருந்தது; இரண்டாவது அவர்கள் சென்று சேர வேண்டிய பலஸ்தீனா நாட்டையும், உலக அபிப்ராயத்தையும் தயார் செய்ய வேண்டியிருந்தது.
உலக சீயோனிய சங்கம்
யூதருக்கென்று ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி சீயோனிய சங்கத்திற்கு வித்திட்டவர்கள்:
- மோசஸ் மெண்டல்சன்
- மொர்தெகாய் மனுவேல் நோவா – டியுனிஸில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி
- நப்தலி ஹெர்ஸ் இம்பர் – போலந்து நாட்டில் ஒரு எபிரேய கவிஞர்
- மோசச் ஹெஸ் – ஜெர்மெனியில் ஒரு பொதுவுடைமைவாதி. 1862-இல் ‘’ரோமாபுரியும் எருசலேமும்’’ என்ற புத்தகத்தைப் பிரசுரம் பண்ணி அப்பொழுது பலஸ்தீனாவை ஆண்ட துருக்கி சுல்தானிடம் தங்களுடைய முற்பிதாக்களின் தேசத்திலே போய்க் குடியேற வருட வாடகைக்கு அந்நாட்டில் கொஞ்சம் நிலம் தரக் கேட்டுக்கொண்டார். பயன் கிட்டவில்லை.
- லியோ பின்ஸ்கர் – ரஷ்யாவில் ஒரு மருத்துவர், தன்னிச்சையான விடுதலை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இக்காலத்தில் பாரிஸீல் இருந்த பாரன் எட்மண்ட் டி ராத்சைல்ட் என்ற செல்வந்தரின் உதவியால் பலஸ்தீனாவில் யூத குடியிருப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
- ஆஷர் ஜிஞ்ச்பர்க் – ரஷ்யாவில் ஒரு அரேபிய எழுத்தாளர்.
- 7 தியோடர் ஹெர்சல் – 1860-1904 ஆஸ்திரியாவின் வியன்னாவில் ஒரு பத்திரிக்கை எழுத்தாளர். 1896-ஆம் ஆண்டு ‘’யூத நாடு’’ (THE JEWISH STATE) என்ற புத்தகத்தை வெளியிட்டு யூதர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டுமென்பதையும் வற்புறுத்தினார். பின்னர் 1897 ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்திலுள்ள பேசில் என்ற நகரத்தில் உலக சீயோனியர் சங்கத்தை (WORLD ZIONIST ORGANISATION) ஆரம்பித்து, நடத்தி, யூதருக்குத் தனி நாடு வேண்டுமென்பதை வலியுறுத்தினார். அதோடு அந்நிய நாடுகளிலுள்ள யூதர் பலஸ்தீனாவுக்குத் திரும்பிப்போய் குடியேற ஊக்குவிக்கப்பட்டனர்.
சிறுகச்சிறுக பல நாடுகளிலிருந்து யூத மக்கள் வந்து குடியேறத் துவங்கினர். 1800-ஆம் வருடம் பலஸ்தீனாவிலிருந்த யூத மக்களின் எண்ணிக்கை 10 ஆயிரம். 1914-இல் இது 90 ஆயிரத்திற்கு உயர்ந்தது. 1914-இல் பாரன் ராத்சைல்டின் (BARON RATHSCHILD) பண உதவியால் 13 ஆயிரம் யூதர் கொண்ட 43 யூத விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
என்றாலும் யூத மக்கள் அந்நாட்டில் வந்து குடியேறுவதை அங்கிருந்த அரேபியர் எதிர்த்தனர். வந்த யூத மக்களும் தங்களுக்கு நிலத்தை அரேபியரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது – (ENCYCLOPEDIA BRITANNICA).
உலக சீயோனிய சங்கத்தை ஆரம்பித்த தியோடர் ஹெர்சல் 1860-ம் வருடம் ஹங்கேரி நாட்டிலுள்ள புட்டபெஸ்ட் நகரில் பிறந்தார். தன்னுடைய மிகுதியான காலத்தை ஒரு யூத நாடு உருவாக வேண்டும் என்பதிலேயே செலவழித்தார். யூத நாடு கண்டிப்பாக உருவாகும் என்றும் நம்பினார். அவர் ஆரம்பித்த சீயோனிய சங்கத்தின் முதல் மகா நாடு பேசில் நகரில் 24 ஆகஸ்ட் 1897-இல் நடந்தது. 50 ஆண்டுகள் கழித்து நவம்பர் 1947-இல் உலக ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் நாடு உருவாக தீர்மானம் நிறைவேற்றியது.
இஸ்ரேல் உருவாவதைப் பார்க்க முடியாமல் தியோடர் ஹெர்சல் 1904 ஜீலை 3-ஆம் தேதி தமது 44-வது வயதில் காலமானார். அவர் தன்னுடைய மரண சாசனத்தில் தன் உடல் தன் தகப்பனாரின் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டு, இஸ்ரேல் நாடு உருவானபின் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்ரேலில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்தப்படியே 1949 ஆகஸ்ட் 17-ஆம் தேதி அவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டு எருசலேமில் ஒரு மலை உச்சியில் அடக்கம் பண்ணப்பட்டு அந்த மலைக்கு ஹெர்சல் மலை (MOUNT HERZL) என்று மறு பெயர் சூட்டப்பட்டது. (SOURCE : THE UNIQUENESS OF ISRAEL – LANCE LAMBERT)
உலக சீயோனிய சங்கத்தின் முயற்சியால் யூத தேசீய நிதி (JEWISH NATIONAL FUND) ஆரம்பிக்கப்பட்டது. உலக முழுவதிலுமுள்ள யூத ஐசுவரியவான்கள் தங்கள் செல்வத்தைத் தாராளமாக இந்நிதிக்கு ஈந்தனர். இந்நிதி பாலஸ்தீனா நாட்டில் நிலம் வாங்கவும், வாங்கிய நிலங்களை அபிவிருத்தி செய்யவும் நாடு முழுவதும் மரங்கள் நடவும் புதிய குடியிருப்புகள் கட்டவும், பல தேசங்களிலிருந்து குடிபெயர்ந்து வரும் யூத மக்களை குடியேற்றவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.